Sunday, October 17, 2010

அ.தி.மு.க. ஆண்டுவிழா.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா,அறிக்கை

சென்னை, அக்.16: அ.தி.மு.க. 39-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆண்டுவிழாவையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நன்னாளில், கழகம் கடந்து வந்த வெற்றிப் பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர்சாய்த்த பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தன் முதல் வெற்றியை பெற்றது. எக்கு கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த நம் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தின் கொள்கை-கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வரவைத்தார்.
இவ்வேளையில், 1984-ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக்காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை நான் பெற்றேன்.
எம்.ஜி.ஆர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கைïட்டும் பிரசாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, அ.தி.மு.க. அமோக வெற்றியை ஈட்டியது.
பின்னர், 1987-ம் ஆண்டு கழகத்தில் பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989-ல் ஆட்சிக்கு வந்தார்.
இருப்பினும், உங்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், 1989-ல் பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்றுபடுத்தி, இழந்த ``இரட்டை இலை'' சின்னத்தை மீட்டு, பூட்டப்பட்ட கட்சி அலுவலகத்தையும் திறந்து, புதிய மறுமலர்ச்சியை கழகத்திற்கு ஊட்டியதன் விளைவாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வை தோற்கடித்து மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு நான் அழைத்து வந்ததை, நீங்கள் அறிவீர்கள்.
அதனைத் தொடர்ந்து 1991 சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 1991-ல் எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அ.தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை வழங்கியது.
1996-ல் நம் கழகம் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது. ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை நான் குவிக்கச் செய்தேன். மேலும், மத்திய ஆட்சியிலும், அதிகாரத்திலும் நம் பேரியக்கத்தை பங்குபெற வைத்து வரலாற்றுப் புரட்சியையும் அ.தி.மு.க. படைத்தது.
அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், எனது தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது. அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியது. இருப்பினும் 2006-ல், பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.

தமிழகத்துக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அ.தி.மு.க. தான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி என்னால் அழைத்துச் செல்ல முடிகிறது என்றால், அதற்கான ஊக்க சக்தியாக இருப்பது தொண்டர்களாகிய உங்களின் அன்பும், ஒத்துழைப்பும், என் மீது எந்நாளும் நீங்கள் கொண்டிருக்கும் மாசற்ற பற்றும் தான்.

அ.தி.மு.க.வின் 39-வது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆங்காங்கே கழகக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக் கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஆற்றல் மிகு அடலேறுகளே! ஆயத்தமாவோம், அதோ! களம் காத்திருக்கிறது! தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்; ஒரு பொன்னான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது. அ.தி.மு.க., தனது முதல் கன்னி வெற்றியை 1973-ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011-ல் அமையப் போகும் புதிய அரசிற்கான சட்டமன்றத் தேர்தலிலும், எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment