Thursday, April 28, 2011

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சே குழுவினருக்கு இந்தியா தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

 
சென்னை: ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக ராஜபக்சே அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும். தேவைப்படின் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. “அப்பாவி மக்களுக்கு சேதமின்மை” என்ற கொள்கையின் அடிப்படையில் “மனிதாபிமான மீட்புப் பணி” நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.

குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட “குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி” மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே இலங்கை அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது. மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது.

மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின.

மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.

உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர். உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டயாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை எல்டிடிஇ நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், எல்டிடிஇ மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, எல்டிடிஇயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலை தான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப் படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே முன்வைத்தார்.

ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக ராஜபட்சவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்சே அமெரிக்காவிற்கு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை இலங்கை அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது.

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலைபட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.

எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக ராஜபக்சே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்சேவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும்.

இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Sunday, April 10, 2011

தமிழகத்தில் மற்றொரு சுதந்திரப் போராட்டம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா


தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றொரு சுதந்திரப் போராட்டம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா கூறினார்.

ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றும்
தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். 

 கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தமிழகத்தை சூறையாடி, உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். இக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  

கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ரெüடிகள் ராஜ்யம், மணல் கொள்ளை, ஊழல், எந்தத் தொழிலையும், எங்கும், யாரும் செய்ய முடியாத வகையில் அக்கிரமம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கள்ள லாட்டரி என சமூக அக்கிரமிங்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்கப்போவது எப்போது? என நல்லோரின் மனசாட்சி கேட்கிறது. 

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்குத் தமிழக மக்கள் தண்டனை கொடுக்கப்போவது எப்போது? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

எங்கும், எதிலும் ஊழல் என்ற சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டியதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது இத் தேர்தல். 

 தமிழகத்தைப் பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக மாற்றவும் திமுக ஆட்சியால் முடியாது. எங்களால் முடியும். 

 தமிழக மக்களை 1 லட்சம் கோடி கடனாளியாக்கியதுதான் திமுக ஆட்சியின் சாதனை. மக்கள் பணத்தைச் சுரண்டி பணக்காரர்களாக வேண்டும் என்ற பேராசை பிடித்த கும்பலிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.  

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதாக ரூ.2 ஆயிரம் மதிப்பில் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கிவிட்டு, ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஆயிரம் ரூபாயை கேபிள் கட்டணமாக வசூலித்துவிடுகின்றனர். கருணாநிதியின் சூழ்ச்சி, தந்திரங்கள் நிறைந்த இதுபோன்ற திட்டங்களே கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.  

வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற சுதந்திரப் போராட்டம் நடத்தியதைப் போன்று, கொள்ளைக்காரர்களிடம் இருந்து தமிழகத்தைக் காக்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதே வரும் சட்டப் பேரவைத் தேர்தல். 

மத்தியில் அமைச்சர் பதவியையும், மாநிலத்தில் ஆட்சியையும் வைத்துக் கொண்டு வேறு எங்கும் காணமுடியாத ஊழலைப் புரிந்து அதிசயக்க வைத்துள்ளனர். 

 பிகார், குஜராத், பஞ்சாப் மாநில வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிடுகையில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

 முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே ஆட்சி நடத்தியதே இதற்குக் காரணம்.  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ள திமுக-வை, 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்து தமிழக மக்கள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும். 

தமிழக மக்களின் உழைப்பை சுரண்டியதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.  பணநாயகத்தால், ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார் 

கருணாநிதி. தமிழகத்தை தன் குடும்ப வசமாக்க நினைக்கும் கருணாநிதியை, குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும்.  

கயவர்களிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, மக்கள் வளமான வாழ்வு பெற, தமிழகம் முதன்மை மாநிலமாக மாற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்அ இஅதிமுக பொதுசெயலாளர் ஜெ. ஜெயலலிதா பேசியது:

Friday, April 1, 2011

தி.மு.க தேர்தல் ஜாதகம்





பகுத்தறிவு பகலவனின் வாரிசுகளாகக் கூறிக் கொள்ளும் திமுகவினர் தேர்தல் பயம் காரணமாக பிரச்சார வாகனத்துக்கு தேங்காய் உடைத்து புறப்படுவதும், பரிகார பூசைகள் செய்ய புறப்படுவதும் சகஜமாகி விட்டதால் நாமும் ஒரு ஜோசியரை பிடித்து திமுக வின் தேர்தல் ஜாதகத்தை கணித்து பலன் சொல்லச் சொன்னோம். இனி ஜோதிட மாமணி கொங்கு மண்டல ஜோதிட சக்கரவர்த்தி பெருந்துறை பெருமாள் கூறுவதை அவர் வாயாலேயே கேட்போம்.

எதிர்க் கட்சிகள் பலமான கூட்டணி அமைத்தது திமுகவிற்கு ஜென்மச் சனி ஆரம்பமாகி விட்டதைக் காட்டுகிறது. சுயமரியாதைக் காரர்களான திமுகவினர் டெல்லிக்கு படை எடுத்து கேட்டதைக் கொடுத்து கூட்டணி அமைத்த நிகழ்வு இனிமேல் காங்கிரஸ் கையில் திமுக இல்லை என்றாகி விட்டது. தமிழகத்தில் 63 நாயன்மார்கள் என்று வர்ணிக்கப்பட்ட காங்கிரஸின் பல கோஷ்டி வேட்பாளர்கள் உள்குத்து காரணமாக வெற்றி பெறுவது சந்தேகமே. இந்நிலையில் திமுக ஆட்சி கூட்டணி ஆட்சியாவது அமைக்க வாய்ப்பு இருக்குமா? என்பது சந்தேகமே. இனி திமுக ஜாதகத்தை விரிவாகப் பார்ப்போம்.


முதலில் ஜாதகத்தில் பலமான எதிர்க் கட்சி கூட்டணி காரணத்தால் திமுகவுக்கு ஜென்மச் சனி பிடித்திருக்கிறது என்று கூறினோமே? சனியின் உக்கிரத்தை குருவின் இடத்தில் இருக்கும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வினியோகம் மூலமும், சுக்கிரன் இடத்தில் இருக்கும் இலவச ஒரு ரூபாய் அரிசி வினியோகம் மூலமும் சரி செய்து விடலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால் சனி தனது இடத்தில் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு பிரம்மாஸ்த்திரத்தை ஏவியதால் திமுகவின் அனைத்து அஸத்திரிங்களையும் தவிடு பொடியாக்கி திமுகவை அனைத்தையும் இழந்து நிர்வாண கோலத்தில் இருக்கச் செய்து விட்டது. அதுதான் சனியின் மகத்துவம். மேலும் தேர்தல் கமிஷனர் மூலம் திருமங்கல பட்டுவாடாக்களை செயல் இழக்கும் முயற்சியில் சனி கிரகம் இறங்கியுள்ளது. சனி பகவானை திருநள்ளாறு சென்று வழிபட்டு பரிகார பூஜை செய்தால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் வழங்குகளிலுருந்து சற்று தப்பிக்கலாம்.


மருத்துவம், கலைஞர் காப்பீடு, போன்ற திட்டங்களை வைத்துள்ள புதன் கிரகத்தால் கரையேறி விடலாம் என்று திமுக நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள பிரச்சனைகளால் திமுகவின் கனவு ஓட்டை விழுந்த படகின் நிலைமையாகி விட்டது.சூரியனின் வீட்டில் உள்ள சினிமாத் துறையில் குடும்ப ஏக போகம் காரணமாக சினிமாத் தொழில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. வல்லான். வகுப்பதே வாய்க்கால் என்ற நிலை சினிமாத் துறையில் ஏற்பட்டு விட்டதால் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமான விஜய் படங்களுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை. சினிமா கதை வசனம் எழுதிய கலைஞரின் அரசியலுக்கு முடிவுரை எழுத சினிமாக்காரர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


செவ்வாய் வீட்டைப் பார்த்தோமானால் எப்படி இருந்த மந்திரிகள் இப்படி ஆகி விட்டார்களா என ஆச்சரியப்படத் தோன்றும். பத்து வருடத்துக்கு முன் உள்ள சொத்துக் கணக்கும் இப்போதுள்ள சொத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. மக்களை முட்டாளாக்கி மந்திரிகள் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி கல்வித் தந்தைகளாகி விட்டார்கள். ஓட்டு போடும்முன் மக்களுக்கு இது ஞாபகம் வராமல் இருக்க வேண்டுமானால் வைட்டமின் ‘ப’ வைத் தரவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. மக்கள் பங்களிப்பில்லாமல் வளர்ச்சி இல்லை. வளர்ச்சியின் பயனாக வந்த அமிர்தத்தை சிலர் எடுத்து அருந்த, கஷ்டங்கள் துன்பங்கள் என விஷத்தை எங்களுக்கு அளிப்பதா என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டதால் திமுக கூடாரம் குழப்பமடைந்துள்ளது.


சந்திரன் வீட்டிலிருந்து விலை வாசி உயர்வு திமுகவை மிரட்டிக் கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு 1000 ரூபாய் கொடுத்தால் மீதி ரூ. 200 மளிகைக் கடைக்காரர் கொடுப்பார். ஆனால் திமுக-காங்கிரஸ் பொருளாதார கொள்கை காரணமாக குண்டூசி முதல் அனைத்து சாமான்களும் விலை ஏறி விட்டது. திமுக ஆட்சியில் மளிகை வாங்கி விட்டு ரூ.1000 கொடுத்தால் மேலும் ரூ.300 கேட்கிறார் மளிகைக் கடைக்காரர். மக்கள் சேமிக்கும் நிலை மாறி மக்கள் கடனாளியாக திரியும் நிலை ஏற்பட்டு விட்டது. சாதாரண பொது மக்கள் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


ராகு வீட்டைப் பார்த்தால் குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மக்களை திமுக மிரட்டிக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. ஒவ்வொரு மந்திரிகளின் வாரிசுகளும் மூத்த உறுப்பினர்களை ஏறி மிதித்து சீட் வாங்கி முன்னேறும் நிலை. கட்சி ஜனநாயகம் கேலிக்குரியதானதால் மக்கள் வேதனையுடன் இருப்பது திமுக கூட்டணிக்கு பாதகமே.


கேது வீட்டைப் பார்த்தோமானால் திமுக வின் ரியல் எஸ்டேட் வன்முறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கொள்ளை, தலீத் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நிலை ஆகியவற்றைப் பார்க்கலாம். தேர்தல் வந்தால் நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்த போது எங்களை மறந்தது ஏன்? என கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளனர்.


எனவே திமுக இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஐசியு-வில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியின் நிலையில் இருப்பதை ஜாதகத்தில் காண முடிகிறது. ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய திமுக பிழைப்பது சந்தேகமே.