Tuesday, March 20, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க உடனடி நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

எனது தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யாவிற்கு இடையே 1988 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, அதன் அடிப்படையில், இதற்கான பணிகள் 2001-ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள்  99.5 விழுக்காடும், இரண்டாவது அணு மின் நிலையத்தின் பணிகள் 93 விழுக்காடும் முடிவுற்றிருந்த நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு சில ஐயப்பாடுகளை எழுப்பி, அதனை மூட வலியுறுத்தி  திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதனையறிந்தவுடன், `மக்கள் நலன்' என்ற உன்னத நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்  வகையில், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை தொடர வேண்டாம் என்று தெரிவித்து, இதுதொடர்பான கோரிக்கை மனுவினை அளிக்க நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்று  பிரதமருக்கு 19.9.2011 அன்று நான் கடிதம் எழுதினேன்.

எனது வேண்டுகோளினையடுத்து, பாரதப் பிரதமரின் உத்தரவிற்கிணங்க, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள் 20.9.2011 அன்று இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்தார். 21.9.2011 அன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அணுமின்  நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை  சந்தித்து பேசியது குறித்து என்னிடம் எடுத்துரைத்தார். 

அன்றைய தினம், அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளும் என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் மேற்கொண்டு தொடரப்படக்கூடாது என தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார்கள். 

அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டு, எனது தலைமையில் 22.9.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அந்தப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகைள நிறுத்தி வைக்குமாறு பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வது'' என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு, 7.10.2011 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமரை டெல்லியில் சந்தித்து, அமைச்சரவை தீர்மானம் அடங்கிய மனு ஒன்றினை அளித்து உள்ளூர்  நிலவரங்களை எடுத்துரைத்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக்குழு இந்தப் பிரச்சனை குறித்து விரிவாக ஆராயும் என்றும் தெரிவித்தார். 

இதனையடுத்து, மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு, அணுமின் நிலைய எதிர்ப்புக்குழு சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேருடனும், மாநில அரசின்  பிரதிநிதிகளான திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடனும் 8.11.2011, 18.11.2011 மற்றும் 15.12.2011 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினரால் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டன. அந்த வினாக்களுக்கான பதில் அறிக்கையை வல்லுநர் குழு அளித்தது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பது குறித்த அறிக்கையையும் அளித்தது.

இதனையடுத்து, 31.1.2012 அன்று நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில், மேலும் ஓர் அறிக்கையை மத்திய வல்லுநர் குழு அளித்தது.  இந்தக் கூட்டத்தில் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பிரதிநிதிகளில் ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். 

இந்த அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலைகள் சர்வதேச தரத்திலான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இத்திட்டத்தின் மூலம் வெளியேறும் கடல்நீர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிர்ணயித்துள்ள அளவில் இருப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க பின் விளைவுகள் ஏதும் இருக்காது எனவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி இந்த அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்படும் என்று 4.2.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்தேன்.

இதன் அடிப்படையில், முன்னாள் அணுமின் சக்தி கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டி.அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக, எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர்  டாக்டர் எஸ். இனியன், மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி  எல்.என். விஜயராகவன் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு 9.2.2012 அன்று அமைக்கப்பட்டது. 

இந்தக் குழு, கூடங்குளம் பகுதிக்குச் சென்று அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களை சந்தித்து, மக்கள் மத்தியிலே நிலவி வரும் எண்ணங்களையும்,  அச்ச உணர்வுகளையும் கேட்டறிந்ததன் அடிப்படையிலும், அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலும், ஓர் அறிக்கையினை தயார் செய்து 28.2.2012 அன்று என்னிடம் அளித்தது.

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட இந்த வல்லுநர் குழு, கடல் நீர் எடுக்கும் பகுதி; உப்பு நீரைக் குடிநீராக்கும் நிலையம்; அணு உலைகளை அவசரமாகக் குளிர்விப்பதற்காக 6.3 மெகாவாட் திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்; ஒவ்வொரு பாதுகாப்பு முறைக்கும் தேவையான மின்கலன் வங்கி மற்றும் கட்டுப்பாட்டு மையம்; அணு உலை கலன்கள், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு, முதன்மைக் குளிர்விக்கும் பம்புகள், வெப்பம் நீக்கும் முறைக்கான காற்று உட்புகும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அணுஉலைக் கட்டிடம்; மின் சுழலி மற்றும் கன்டன்ஸர் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தது.

பின்னர் அணுசக்திக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த 9 பிரதிநிதிகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரு கலந்தாய்வையும் நடத்தியது.   

இந்தக்  கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், இத்திட்டம் குறித்த உள்ளூர் மக்களிடையே ஏற்பட்டுள்ள உணர்வுகளைத் தெரிந்து கொண்டு அதனைச் சரி செய்ய வேண்டும் என்பதே இந்த வல்லுநர் குழுவின் நோக்கம் என்றும், கூடங்குளம் மக்களின் எண்ணங்களை தமிழக அரசு மிக உயர்வாகக் கருதுவதாகவும், அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களிடம் அழுத்தம் திருத்தமாக வல்லுநர் குழு எடுத்துக் கூறியது.  

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு கீழ்க்காணும் கருத்துகளை தெரிவித்துள்ளது.

* கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.

* கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளைப் போக்க உண்மையான முயற்சிகள் அனைத்தையும் அரசு எடுத்துள்ளது.

மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழுவும், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்து உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள்  எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதில்களை அளித்துள்ளது.

இந்த வல்லுநர் குழு அணுமின் நிலையத்தை பார்வையிட்ட போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அறிக்கையில் விவரித்துள்ளது.

* மேற்கூறிய காரணங்களினால், அரசு இத்திட்டத்தின் செயல்பாடுகளை மீண்டும் துவக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து அதன் மூலம் விரைவில் மின் உற்பத்தி தொடங்க ஆலோசிக்கலாம் என்றும்;

* மேலும், உள்ளூர் மக்கள் இடையே சுமூகமான உறவுகள் ஏற்பட வழிவகுக்கும் வகையில், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திட அணுசக்தித் துறை கேட்டுக் கொள்ளப்படலாம் என்றும் தெரிவித்தது.  வல்லுநர் குழு இதற்கான கீழ்க்கண்ட திட்டங்களை பரிந்துரைத்துள்ளது:

* கூடங்குளம் பகுதி மக்களிடையே இந்த மின் நிலையத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்;

* கூடங்குளம் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளைச் சரிசெய்ய தற்போது நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையை மாற்றி கூடங்குளம் பகுதியிலேயே விசைப்படகுகளைச் சரிசெய்யும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது;

* உள்ளூர் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைத்து பின்னர் நல்ல விலைக்கு விற்க ஏதுவாக ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்.

இந்தப் பின்னணியில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த அறிக்கை; மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த அறிக்கை; மற்றும் அணுமின் திட்டத்திற்கு எதிரானவர்களின் மனு விரிவாக ஆராயப்பட்டு, நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவை ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதும், எவ்வாறான நிலையிலும் இந்த அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பதும், இந்த அணுமின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் தெரியவந்ததன் அடிப்படையிலும்; இந்த அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதும்; எனவே மீனவர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாது என்பதன் அடிப்படையிலும்; அப்பகுதி மக்களிடையே நிலவும் ஐயப்பாடுகளுக்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டும்; அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது தான் என்பது தெரிய வந்ததன் அடிப்படையிலும்; மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத நிலைமையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்  என்பதைக் கருத்தில்  கொண்டும்; 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எனது தலைமையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கூடங்குளம் பகுதியில் சிறப்பு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அங்கு வசிக்கும் மீனவர்களின் விசைப்படகுகளை சரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்; மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்க ஏதுவாக ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்; அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தருதல்; சாலை வசதிகள் போன்ற இன்றியமையா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகிய வளர்ச்சிப் பணிகள் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவிற்கு இணங்க, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

அணுமின் நிலையப் பணிகளை மீண்டும் உடனடியாக மேற்கொள்வது என்ற தமிழக அரசின் இந்த முடிவிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Friday, February 3, 2012

பேரறிஞர் அண்ணாவின் 43-வது நினைவு தினம்.


எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமாய் தவமிருந்து...
திங்களாய்! செங்கதிராய்! திருநாட்டின் ஒளிவிளக்காய்!
வள்ளுவன் குரல் போல, வடிவமோ சிறிதாக!
அவர் உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக....
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்....
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்! அண்ணாவென்றேல்லோரும் அழைக்கவந்தார்!
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார். அண்ணா.. அண்ணா..  எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.

Tuesday, January 17, 2012

மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம். புரட்சித் தலைவர் M.G.R.

"மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம்" புரட்சித் தலைவர் பற்றி சில முக்கியமான புள்ளி விவரங்கள்


1) திரையுலகில் புரட்சித் தலைவர் வலம் வந்த ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட உலகல் அதிக தொகை சம்பளம் வாங்கிய ஒரே திரையுலக திலகம் - படம் மீனவ நண்பன், வருடம் - 1977, தொகை 22 லட்சம்.


2) இரு வேட நடிப்பில் புரட்சி - இரட்டை வேட நடிப்பில் 19 திரைக்காவியங்களில் நடித்து புகழ்பெற்ற ஒரே உலக திரையுலக திலகம் - மக்கள் திலகமே!


3) ஒரு நடிகரின் மன்றத்தை பாரத பிரதமர் திறந்து வைத்து உலகில் நம் மக்கள் திலகதின் பெயரில் அமைந்த மன்றம் ஒன்று தான். 
இடம்: அந்தமான் தீவு - பாரத பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி (1963)


4) உலகில் புரட்சித் தலைவர் ஒருவர்க்குதான் திரைப்பட உலகில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் என்ற அமைப்பு உருவாகி, 85 நாடுகளில் மக்கள் திலகத்திற்கு மன்றங்கள் அமைக்கப்பட்டது.


5) சொந்த காவியங்கள் தயாரித்து 2 வேட நடிப்பை தாங்கி நடித்து, இயக்குனராக பணியாற்றி உலக திரைப்பட துறைக்கு சவால் விட்டு, சகாப்தம் படைத்த முப்பெரும் காவியங்கள் வெளிவந்து வெள்ளி விழா ஓடி சாதனை படைத்தது! வேறு எந்த நடிகர் தயாரித்த சொந்த படங்களும் மக்கள் திலகம் தயாரித்த காவியங்களுக்கு ஈடு இணையில்லை. (படங்கள் - நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன்)


6) புரட்சித் தலைவர் அவர்கள் நடித்த வண்ண படங்கள் 42 இதில் 100 நாட்கள் ஒடி சாதனை பெற்ற காவியங்கள் 35. 

வாழ்க புரட்சித் தலைவர் M.G.R..

Saturday, December 31, 2011

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது:புரட்சித்தலைவிஅம்மா ஜெயலலிதா.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்புரட்சித்தலைவிஅம்மா ஜெயலலிதா பேசியது:


கடந்த ஆண்டு இதே டிசம்பர் திங்களில் அதிமுகவின் வெற்றிக்கான 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. அயராது பாடுபட்ட என் பாசமுடைய கழக தொண்டர்களான உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைவரிசை கொள்ளை பணத்தையும், அதிகார பலத்தையும், தீயசக்தி கும்பல் திரட்டி வைத்திருந்த வன்முறை கும்பல்களையும் திடத்தோடு எதிர்கொண்டு ஒரு போதும் கழகத்தைக் காட்டிக் கொடுக்காது வெற்றி ஒன்றே நம் இலக்கு என்று பாடுபட வேண்டும்.
கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்க துல்லியமான செயல் திட்டங்களையும், நாம் வகுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் குறையாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் உங்களின் தலையாய பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.


நேர்மை... ஒரு 'சிறு' கதை!
இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறு கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம் தான். சின்ன தவறு தான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும் என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.
"எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்'' என்றவன் வீட்டுக்கு வந்தான். விதிமுறைகளை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை. முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது. காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான்.
"இதை செய்வது சரியா அம்மா?'' என்று கேட்டான். "வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால், இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது. தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிறபோதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்...'' என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய். அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான்.
தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன. இந்தக் கதை போலத் தான் நாம் செய்யும் தவறு, நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும். ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்.


தேசிய அரசியலில் அதிமுக...
மேலும், அதிமுக தமிழகத்தின் எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துகிற காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது.
"அனைத்திந்திய'' என்றே துவங்கும் நம் இயக்கத்தின் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998-லேயே உருவாக்கினோம். அன்று வாஜ்பாயை பிரதமராக்கி பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம். நாமும் இருப்போம் என்பது திண்ணம்.
இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்து முடித்துவிட்டால் இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக, கையேந்திப் போராடுகிற, இதுபோன்ற நிலை நமக்கு ஒரு போதும் வராது.


தீர்மானிக்கிற இடத்தில் நாம் இருப்போம். அப்படி இருக்கிற போது தேசத்தின் இறையாண்மை குலையாமலும்; தமிழகத்தின் உரிமைகள், உடமைகள் எதிலும் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமலும் முடிவெடுக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும். அந்த நிலை, அந்த அரசியல் பொற்காலம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பட்டொளி வீசிப்பறக்க வேண்டுமானால் என் அன்பிற்குரிய கழகக் கண்மணிகளும், தொண்டர்களும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், சேது சமுத்திர திட்டம் போன்ற கணக்கெழுதும் திட்டங்களாலும் கொள்ளையடித்து வைத்திருக்கும் கோடானு கோடி பணத்தை கொண்டிருக்கும் தீய சக்திகளின் கும்பலை எதிர்கொண்டு போராடுகிற கழக நிர்வாகிகள் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை.
உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவைகள் அறிந்து எப்படி அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி சரி செய்கிற சாமர்த்தியம் எனக்கு உண்டு என்பதை நீங்கள் பூரணமாக நம்பலாம். அதேவேளையில், இலை வெளியே தெரியும். பூ வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். கனி வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும். மரமும் வெளியே தெரியும். ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் கழகத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடித் தொண்டர்கள் என்பதை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். எனவே, தொண்டர்களிடம் நம் அதிகாரத்தை மறந்து தோழமை உணர்வோடு பழக வேண்டும். அது போலவே பொதுமக்களிடம் எளிமையோடு நடந்துகொள்ள வேண்டும்.


துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது...
நாம், நமக்கு துரோகம் செய்யாமல், ஒற்றுமையோடு நின்றோமானால், எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன், எப்படை வரினும் இப்படையே வெல்லும். அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள். குற்றம் புரிகிறார்கள். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள்.
அப்படி நீக்கப்படும்போது ஒரு சிலர் சரி நாம் தவறு செய்துவிட்டோம், ஆகவே இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனைதான். இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள். இன்னும் சிலர், சரி நம்மை இந்த கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள், வேறு கட்சியில் போய் சேர்ந்துவிடலாம், தொடர்ந்து அரசியல் நடத்தலாம் என்று முடிவெடுப்பார்கள். அதில் தவறேதுமில்லை.
வாழ்க்கை இருக்கின்றவரை வாழ்ந்தாக வேண்டும். ஒரு கட்சியில் இல்லாவிட்டாலும் இன்னொரு கட்சியில் சேருவதில் தவறில்லை. இந்தக் கட்சியில் இனிமேல் அவர்களுக்கு இடமில்லை என்று நீக்கிய பின்பு, வேறு கட்சியில் அவர்கள் போய் சேருவது தவறு என்று சொல்ல முடியாது. அப்படி முடிவெடுப்பவர்கள் ஒரு சிலர் உண்டு. ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம், நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம், இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழிவாங்கிவிடுவோம், ஆகவே எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது," என்றார் புரட்சித்தலைவிஅம்மா.

Saturday, December 24, 2011

தலைவர் எம்.ஜி.ஆர் 24-வது நினைவு நாள்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் 
நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு 
அமரர் ஆகிய நாள் 24.12.1987. 
அவரது 24-வது ஆண்டு நினைவு நாள் 
24.12.11 சனிக்கிழமை 

ஒருமுறை திருச்சிக்கு . எம்.ஜி.ஆர்.  காரில் பயணிக்கிறார். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். 

அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். 

பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''                         

                          மாபெரும் சபையில் நீ நடந்தால் 
                          உனக்கு மாலைகள் விழவேண்டும்
                          ஒரு மாற்று குறையாத மன்னவன் 
                           இவரென்று போற்றி புகழ வேண்டும்.

Tuesday, September 13, 2011

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில் 
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் 
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்


கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை


கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்


கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

Friday, May 20, 2011

செய்தபாவம் தீருதையா திருக்குவளையூராரே!