Tuesday, March 20, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க உடனடி நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

எனது தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யாவிற்கு இடையே 1988 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, அதன் அடிப்படையில், இதற்கான பணிகள் 2001-ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள்  99.5 விழுக்காடும், இரண்டாவது அணு மின் நிலையத்தின் பணிகள் 93 விழுக்காடும் முடிவுற்றிருந்த நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு சில ஐயப்பாடுகளை எழுப்பி, அதனை மூட வலியுறுத்தி  திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதனையறிந்தவுடன், `மக்கள் நலன்' என்ற உன்னத நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்  வகையில், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை தொடர வேண்டாம் என்று தெரிவித்து, இதுதொடர்பான கோரிக்கை மனுவினை அளிக்க நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்று  பிரதமருக்கு 19.9.2011 அன்று நான் கடிதம் எழுதினேன்.

எனது வேண்டுகோளினையடுத்து, பாரதப் பிரதமரின் உத்தரவிற்கிணங்க, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள் 20.9.2011 அன்று இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்தார். 21.9.2011 அன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அணுமின்  நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை  சந்தித்து பேசியது குறித்து என்னிடம் எடுத்துரைத்தார். 

அன்றைய தினம், அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளும் என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் மேற்கொண்டு தொடரப்படக்கூடாது என தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார்கள். 

அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டு, எனது தலைமையில் 22.9.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அந்தப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகைள நிறுத்தி வைக்குமாறு பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வது'' என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு, 7.10.2011 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமரை டெல்லியில் சந்தித்து, அமைச்சரவை தீர்மானம் அடங்கிய மனு ஒன்றினை அளித்து உள்ளூர்  நிலவரங்களை எடுத்துரைத்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக்குழு இந்தப் பிரச்சனை குறித்து விரிவாக ஆராயும் என்றும் தெரிவித்தார். 

இதனையடுத்து, மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு, அணுமின் நிலைய எதிர்ப்புக்குழு சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேருடனும், மாநில அரசின்  பிரதிநிதிகளான திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடனும் 8.11.2011, 18.11.2011 மற்றும் 15.12.2011 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினரால் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டன. அந்த வினாக்களுக்கான பதில் அறிக்கையை வல்லுநர் குழு அளித்தது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பது குறித்த அறிக்கையையும் அளித்தது.

இதனையடுத்து, 31.1.2012 அன்று நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில், மேலும் ஓர் அறிக்கையை மத்திய வல்லுநர் குழு அளித்தது.  இந்தக் கூட்டத்தில் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பிரதிநிதிகளில் ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். 

இந்த அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலைகள் சர்வதேச தரத்திலான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இத்திட்டத்தின் மூலம் வெளியேறும் கடல்நீர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிர்ணயித்துள்ள அளவில் இருப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க பின் விளைவுகள் ஏதும் இருக்காது எனவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி இந்த அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்படும் என்று 4.2.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்தேன்.

இதன் அடிப்படையில், முன்னாள் அணுமின் சக்தி கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டி.அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக, எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர்  டாக்டர் எஸ். இனியன், மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி  எல்.என். விஜயராகவன் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு 9.2.2012 அன்று அமைக்கப்பட்டது. 

இந்தக் குழு, கூடங்குளம் பகுதிக்குச் சென்று அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களை சந்தித்து, மக்கள் மத்தியிலே நிலவி வரும் எண்ணங்களையும்,  அச்ச உணர்வுகளையும் கேட்டறிந்ததன் அடிப்படையிலும், அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலும், ஓர் அறிக்கையினை தயார் செய்து 28.2.2012 அன்று என்னிடம் அளித்தது.

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட இந்த வல்லுநர் குழு, கடல் நீர் எடுக்கும் பகுதி; உப்பு நீரைக் குடிநீராக்கும் நிலையம்; அணு உலைகளை அவசரமாகக் குளிர்விப்பதற்காக 6.3 மெகாவாட் திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்; ஒவ்வொரு பாதுகாப்பு முறைக்கும் தேவையான மின்கலன் வங்கி மற்றும் கட்டுப்பாட்டு மையம்; அணு உலை கலன்கள், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு, முதன்மைக் குளிர்விக்கும் பம்புகள், வெப்பம் நீக்கும் முறைக்கான காற்று உட்புகும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அணுஉலைக் கட்டிடம்; மின் சுழலி மற்றும் கன்டன்ஸர் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தது.

பின்னர் அணுசக்திக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த 9 பிரதிநிதிகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரு கலந்தாய்வையும் நடத்தியது.   

இந்தக்  கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், இத்திட்டம் குறித்த உள்ளூர் மக்களிடையே ஏற்பட்டுள்ள உணர்வுகளைத் தெரிந்து கொண்டு அதனைச் சரி செய்ய வேண்டும் என்பதே இந்த வல்லுநர் குழுவின் நோக்கம் என்றும், கூடங்குளம் மக்களின் எண்ணங்களை தமிழக அரசு மிக உயர்வாகக் கருதுவதாகவும், அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களிடம் அழுத்தம் திருத்தமாக வல்லுநர் குழு எடுத்துக் கூறியது.  

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு கீழ்க்காணும் கருத்துகளை தெரிவித்துள்ளது.

* கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.

* கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளைப் போக்க உண்மையான முயற்சிகள் அனைத்தையும் அரசு எடுத்துள்ளது.

மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழுவும், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்து உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள்  எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதில்களை அளித்துள்ளது.

இந்த வல்லுநர் குழு அணுமின் நிலையத்தை பார்வையிட்ட போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அறிக்கையில் விவரித்துள்ளது.

* மேற்கூறிய காரணங்களினால், அரசு இத்திட்டத்தின் செயல்பாடுகளை மீண்டும் துவக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து அதன் மூலம் விரைவில் மின் உற்பத்தி தொடங்க ஆலோசிக்கலாம் என்றும்;

* மேலும், உள்ளூர் மக்கள் இடையே சுமூகமான உறவுகள் ஏற்பட வழிவகுக்கும் வகையில், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திட அணுசக்தித் துறை கேட்டுக் கொள்ளப்படலாம் என்றும் தெரிவித்தது.  வல்லுநர் குழு இதற்கான கீழ்க்கண்ட திட்டங்களை பரிந்துரைத்துள்ளது:

* கூடங்குளம் பகுதி மக்களிடையே இந்த மின் நிலையத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்;

* கூடங்குளம் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளைச் சரிசெய்ய தற்போது நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையை மாற்றி கூடங்குளம் பகுதியிலேயே விசைப்படகுகளைச் சரிசெய்யும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது;

* உள்ளூர் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைத்து பின்னர் நல்ல விலைக்கு விற்க ஏதுவாக ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்.

இந்தப் பின்னணியில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த அறிக்கை; மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த அறிக்கை; மற்றும் அணுமின் திட்டத்திற்கு எதிரானவர்களின் மனு விரிவாக ஆராயப்பட்டு, நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவை ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதும், எவ்வாறான நிலையிலும் இந்த அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பதும், இந்த அணுமின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் தெரியவந்ததன் அடிப்படையிலும்; இந்த அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதும்; எனவே மீனவர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாது என்பதன் அடிப்படையிலும்; அப்பகுதி மக்களிடையே நிலவும் ஐயப்பாடுகளுக்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டும்; அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது தான் என்பது தெரிய வந்ததன் அடிப்படையிலும்; மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத நிலைமையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்  என்பதைக் கருத்தில்  கொண்டும்; 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எனது தலைமையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கூடங்குளம் பகுதியில் சிறப்பு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அங்கு வசிக்கும் மீனவர்களின் விசைப்படகுகளை சரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்; மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்க ஏதுவாக ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்; அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தருதல்; சாலை வசதிகள் போன்ற இன்றியமையா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகிய வளர்ச்சிப் பணிகள் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவிற்கு இணங்க, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

அணுமின் நிலையப் பணிகளை மீண்டும் உடனடியாக மேற்கொள்வது என்ற தமிழக அரசின் இந்த முடிவிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.