Friday, November 19, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்,கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவிஅறிக்கை

அனைத்து சட்டவிரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி சொத்துக்களை குவித்து வைத்து
தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிற கருணாநிதியையும் அவர் குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா எச்சரிக்கை


சென்னை, நவ. 19 -

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சொத்துக்களை குவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற கருணாநிதியையும், கருணாநிதி குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவித்து, குடும்ப ஆட்சி அழியும் நேரம் நெருங்கிவிட்டது என எச்சரிக்கிறேன் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இதுகுறித்து கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் கருணாநிதியால் வெளியிடப்பட்ட அறிக்கை “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. வளம் கொழிக்கும் இலாகா பறிபோய் விட்டதே என்ற ஆத்திரத்தில், நிதானம் இழந்து, ஒரு கோமாளித்தனமான அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருக்கிறார். விரக்தியின் விளிம்பிற்கு தான் சென்றுவிட்டதை தன்னுடைய அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் கருணாநிதி.

இழப்பு நிச்சயம் ஏற்பட்டுள்ளது
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், அனுமானத்தின் அடிப்படையிலே இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறை தானா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இழப்பின் மதிப்பு தான் அனுமானம் என்பதையும், இழப்பு அனுமானம் அல்ல என்பதையும் கருணாநிதி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் இழப்பு என்பது, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம், அல்லது இரண்டு லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பே ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. இழப்பு நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது. உதாரணமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் 10,000 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். எனவே, லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது என்பது அனுமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதை கருணாநிதிக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கருணாநிதி பேசுவது கண்டனத்துக்குரியது
அடுத்தபடியாக, மாநில அரசின் பல்வேறு துறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் தணிக்கை அதிகாரியின் அறிக்கைகள் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. இது மட்டுமல்லாமல், எனது ஆட்சிக் காலத்தில் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளுக்காக நான் அப்போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேனா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது கருணாநிதியின் அறியாமையைத் தான் காட்டுகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மீதான குறைபாடுகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது என்பது வழக்கமான ஒன்று. அந்த குறைபாடுகள் எல்லாம் எல்லோரது ஆட்சிக் காலங்களிலும் நடைபெற்று இருக்கின்றன. இவைகள் எல்லாம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது கூறப்படும் பொதுவான குறைபாடு. இதற்காக எந்த முதலமைச்சரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலும் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அண்மையில் கூட, DLF நிறுவனத்திற்கு 26 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டதில் மாநில அரசுக்கு 148 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்காக கருணாநிதி என்ன ராஜினாமா செய்தாரா? திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மைனாரிட்டி தி.மு.க. அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய தணிக்கை அதிகாரி சங்கரநாராயணனை பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்ததை எல்லாம் மறந்துவிட்டு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் கருணாநிதி பேசுவது கண்டிக்கத் தக்கது.

திசைதிருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை விடுகிறார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலைப் பொறுத்த வரையில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை கடுமையாக சாடியிருக்கிறது இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை. 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? Empowered Group of Ministers என்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கடைசி தேதி ஏன் முன் தேதியிடப்பட்டது? தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு 85 உரிமங்கள் வழங்கப்பட்டது எப்படி? கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையை கடைபிடித்ததன் நோக்கம் என்ன? அந்தக் கொள்கையும் சரியாக கடைபிடிக்கப்படாததன் காரணம் என்ன? என தணிக்கை அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ராசாவின் மீது தனிப்பட்ட முறையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளே தவிர, மத்திய அரசின் மீது பொதுவாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. அதனால் தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இவற்றை எல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்

அடுத்தபடியாக, “வெறும் கருத்தியலான இழப்பை பெரிதுப்படுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதும் சற்றும் முறையல்ல” என்று கருணாநிதி கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது. தமிழக அரசின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய். மூன்று ஆண்டு தமிழக அரசின் வருவாயை மொத்தமாக முழுங்கியது கருணாநிதிக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள குடும்பத்தின் தலைவரான கருணாநிதிக்கு, 1,76,379 கோடி ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கோ திருப்பி விடப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கருணாநிதி பேசுவதைப் பார்த்தால், தமிழக மக்கள் உட்பட இந்திய மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டிய பணத்தை ‘தன்’ மக்களுக்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு விட்டாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சொத்துக்களை குவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற கருணாநிதியையும், கருணாநிதி குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவித்து, குடும்ப ஆட்சி அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment