Saturday, December 31, 2011

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது:புரட்சித்தலைவிஅம்மா ஜெயலலிதா.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்புரட்சித்தலைவிஅம்மா ஜெயலலிதா பேசியது:


கடந்த ஆண்டு இதே டிசம்பர் திங்களில் அதிமுகவின் வெற்றிக்கான 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. அயராது பாடுபட்ட என் பாசமுடைய கழக தொண்டர்களான உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைவரிசை கொள்ளை பணத்தையும், அதிகார பலத்தையும், தீயசக்தி கும்பல் திரட்டி வைத்திருந்த வன்முறை கும்பல்களையும் திடத்தோடு எதிர்கொண்டு ஒரு போதும் கழகத்தைக் காட்டிக் கொடுக்காது வெற்றி ஒன்றே நம் இலக்கு என்று பாடுபட வேண்டும்.
கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்க துல்லியமான செயல் திட்டங்களையும், நாம் வகுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் குறையாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் உங்களின் தலையாய பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.


நேர்மை... ஒரு 'சிறு' கதை!
இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறு கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம் தான். சின்ன தவறு தான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும் என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.
"எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்'' என்றவன் வீட்டுக்கு வந்தான். விதிமுறைகளை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை. முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது. காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான்.
"இதை செய்வது சரியா அம்மா?'' என்று கேட்டான். "வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால், இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது. தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிறபோதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்...'' என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய். அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான்.
தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன. இந்தக் கதை போலத் தான் நாம் செய்யும் தவறு, நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும். ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்.


தேசிய அரசியலில் அதிமுக...
மேலும், அதிமுக தமிழகத்தின் எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துகிற காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது.
"அனைத்திந்திய'' என்றே துவங்கும் நம் இயக்கத்தின் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998-லேயே உருவாக்கினோம். அன்று வாஜ்பாயை பிரதமராக்கி பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம். நாமும் இருப்போம் என்பது திண்ணம்.
இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்து முடித்துவிட்டால் இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக, கையேந்திப் போராடுகிற, இதுபோன்ற நிலை நமக்கு ஒரு போதும் வராது.


தீர்மானிக்கிற இடத்தில் நாம் இருப்போம். அப்படி இருக்கிற போது தேசத்தின் இறையாண்மை குலையாமலும்; தமிழகத்தின் உரிமைகள், உடமைகள் எதிலும் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமலும் முடிவெடுக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும். அந்த நிலை, அந்த அரசியல் பொற்காலம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பட்டொளி வீசிப்பறக்க வேண்டுமானால் என் அன்பிற்குரிய கழகக் கண்மணிகளும், தொண்டர்களும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், சேது சமுத்திர திட்டம் போன்ற கணக்கெழுதும் திட்டங்களாலும் கொள்ளையடித்து வைத்திருக்கும் கோடானு கோடி பணத்தை கொண்டிருக்கும் தீய சக்திகளின் கும்பலை எதிர்கொண்டு போராடுகிற கழக நிர்வாகிகள் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை.
உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவைகள் அறிந்து எப்படி அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி சரி செய்கிற சாமர்த்தியம் எனக்கு உண்டு என்பதை நீங்கள் பூரணமாக நம்பலாம். அதேவேளையில், இலை வெளியே தெரியும். பூ வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். கனி வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும். மரமும் வெளியே தெரியும். ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் கழகத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடித் தொண்டர்கள் என்பதை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். எனவே, தொண்டர்களிடம் நம் அதிகாரத்தை மறந்து தோழமை உணர்வோடு பழக வேண்டும். அது போலவே பொதுமக்களிடம் எளிமையோடு நடந்துகொள்ள வேண்டும்.


துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது...
நாம், நமக்கு துரோகம் செய்யாமல், ஒற்றுமையோடு நின்றோமானால், எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன், எப்படை வரினும் இப்படையே வெல்லும். அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள். குற்றம் புரிகிறார்கள். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள்.
அப்படி நீக்கப்படும்போது ஒரு சிலர் சரி நாம் தவறு செய்துவிட்டோம், ஆகவே இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனைதான். இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள். இன்னும் சிலர், சரி நம்மை இந்த கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள், வேறு கட்சியில் போய் சேர்ந்துவிடலாம், தொடர்ந்து அரசியல் நடத்தலாம் என்று முடிவெடுப்பார்கள். அதில் தவறேதுமில்லை.
வாழ்க்கை இருக்கின்றவரை வாழ்ந்தாக வேண்டும். ஒரு கட்சியில் இல்லாவிட்டாலும் இன்னொரு கட்சியில் சேருவதில் தவறில்லை. இந்தக் கட்சியில் இனிமேல் அவர்களுக்கு இடமில்லை என்று நீக்கிய பின்பு, வேறு கட்சியில் அவர்கள் போய் சேருவது தவறு என்று சொல்ல முடியாது. அப்படி முடிவெடுப்பவர்கள் ஒரு சிலர் உண்டு. ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம், நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம், இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழிவாங்கிவிடுவோம், ஆகவே எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது," என்றார் புரட்சித்தலைவிஅம்மா.

No comments:

Post a Comment