Thursday, March 24, 2011

2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அதிமுக - தேர்தல் அறிக்கை.24.03.2011.

தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகத்தின் லட்சியம். 

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம்.  ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, "நாடென்ன செய்தது நமக்கு?" என்ற நிலை மாறி, "நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று சொல்லும் நிலைக்கு மக்களையும், இளைஞர்களையும் தயார்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும். 
 தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:-


வேளாண் திட்டங்கள்...

* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும்.  .

* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை இலவசமாக வழங்குவோம்.
* தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.  விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.

ரூ.1 அரிசி இலவசமாக..
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
* நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல்
40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்...
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.


அனைவருக்கும் தரமான மருத்துவம்...
* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

நவீன பசுமை வீடு...
* கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
அதன்படி, அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். 
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

இருண்ட தமிழகம் ஒளி பெற..
* இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
    
சிறப்பு உணவுப் பூங்கா...

* விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
* குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும். 
* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

ஆடு, மாடுகள் இலவசம்...
* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்...
* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும். தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
* 10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு கூடுதல் நிதி...
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்
* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.
* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும். 
* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்...
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர். 
* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக...
* படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க - அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.

சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்..
* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.  அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.

* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். 


ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஃப்ரீ...
* தாய்மார்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

இலவச பஸ் பாஸ்...
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு...
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும். தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும்.  கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும். 

நவீன நீர்வழிச் சாலை..
* தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். நவீன நீர்வழிச் சாலைக்கு உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். 
* முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழிக்காக...
* தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

* கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்காக...
* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
* அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக...
* மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும்.  அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 

கேபிள் டிவி அரசுடமை... 
* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும்.  அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். டிடிஎச் சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு...
* செயல்படாத கிராமப்புற பிபிஓ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.  இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மோனோ ரயில் திட்டங்கள்..
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருமண உதவித் தொகை...
* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

சட்டம் ஒழுங்கு கண்டிப்பு... 
  * சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். 
* மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 

* முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு..
* திருப்பூர் சாயக் கழிவு பிரச்னையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.

முதியோருக்கு கூடுதல் உதவித் தொகை...
* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். 
* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,

பிற மொழி பயிற்சி... 
* பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நுழைவுத் தேர்வு..
* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.

108 ஆம்புலன்ஸ்..
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.

பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்...
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும். 
* ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
* கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

கோடம்பாக்கத்தை மீட்க...
திரைப்படத் துறையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். 
* நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment